ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
10-6-2019- கன்னி.
12-6-2019- துலாம்.
14-6-2019- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 1, 2, 3.
செவ்வாய்: புனர்பூசம்- 1, 2.
புதன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
குரு: கேட்டை- 4, 3.
சுக்கிரன்: கார்த்திகை- 3, 4, ரோகிணி- 1, 2.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
13-6-2019- செவ்வாய் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு. வாரக்கடைசியில் (13-ஆம்தேதி) அஸ்தமனம் அடைவார். (20-6-2019-ல் உதயம்). எந்த ஒரு ஜாதகத் திலும், எந்த ஒரு கிரகமும் அஸ்தமனம் அடையக்கூடாது. நீசமானாலும், நீசபங்கம் என்று விதிவிலக்கு உண்டு. பகையாக இருந்தாலும், தற்காலிலிக மித்ரு என்று விதிவிலக்கு உண்டு. வக்ரமானாலும், உக்ரபலன் என்று விதிவிலக்கு உண்டு. அஸ்தமனமானால், அந்த பாவமும் (வீடு), ஆதிபத்தியமும், காரகத்துவமும் எதிர்மறைப் பலனாக வேலைசெய்யும். அதேபோல அஸ்தமனமான கிரகத்தின் தசாபுக்தியின் பலனும் எதிர்மறையாகவே இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல; 8-க்குடையவரும் ஆவார். அவருக்கு சாரம்கொடுத்த கிரகம் குரு (புனர்பூசத்தில் செவ்வாய்) ராசிக்கு 8-ல் மறைவு. குரு 9, 12-க்குடையவர் என்பதால், தகப்பனார் அல்லது தகப்பனார்வழி உறவினர்கள் வகையில் கவலைகளும் பிரச்சினைகளும் உருவாகலாம். சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் கிணறுவெட்ட பூதம் புறப்பட்ட கதை யாகத் தோன்றும். சிலருடைய அனுபவத்தில், எப்போதோ விற்ற சொத்து இப்போது செல்லாது என்றும், புது வாரிசு உரிமை கோரியும் வழக்குத் தொடரலாம் அல்லது வாங்கிய சொத்து- மைனர் சொத்து என்றோ, நான்குவழிச் சாலை அமைப்புக்காக எடுத்துக் கொள்ளும் நிலையோ வரலாம். அல்லது ரோடு ஆக்கிரமிப்பு என்று இடிபடலாம். சிலர், சகோதர- சகோதரி வகையில் பிரச்சினைகளை சந்திக்கலாம். அதாவது கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஜாதக தசாபுக்திகளில் சம ராகு- கேது, சனி தோஷமிருந்தால், சிலருக்கு அகால மரணம், அவமிருத்யு தோஷம் போன்றவை நடக்கும். அதாவது இயற்கை மரணம் என்பது ஆண்டு அனுபவித்து முதுமைப் பருவத்தில் வருவது காலமிருத்யு. இளமைப் பருவத்தில்- வாழ வேண்டிய பருவத்தில் வருவது அகால மிருத்யு. தற்கொலை அல்லது விபத்து அல்லது கொலை போன்ற துர்மரணம்- அபமிருத்யு என்று மூன்று நிலை! மார்க்கண்டேயனுக்கு 16 வயதில் அகால மிருத்யு தோஷம் இருந்தது. அதைத் தவிர்க்க, அவர் சிவபூஜைசெய்து ஒவ்வொரு தலமாகச் சென்றார். 16 வயது முடியும் தறுவாயில், திருக் கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரரை வழிபடும் போது எமன் பாசக்கயிறை வீசுகிறான். மார்க் கண்டேயன் இடைவெளியில்லாமல் சிவனைக் கட்டித்தழுவ, பாசக்கயிறு சிவலிலிங்கத்தின்மீதும் தொடுக்க, சிவன் எமனை சம்ஹாரம் செய்கிறார். மார்க்கண்டனுக்கு என்றும் பதினாறு என்று ஆயுள் தீர்க்கம் உண்டானது. எனவே சிவ வழிபாடு செய்வது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக இருக்கிறார். சூரியன் சம்பந்தம்; குரு பார்வை. தொடக்கத்தில் 4-க்குடைய சூரியன் சாரத்திலும், பிறகு 3-க்குடைய சந்திரன் சாரத்திலும் (கிருத்திகை, ரோகிணி) சஞ்சாரம்! ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடக்கிறது. அதனால் சிலருக்கு இடப்பெயர்ச்சி, தொழில் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சிலர் வெளிநாடு போகலாம். பொதுவாக ஏழரைச்சனியோ அட்ட மச்சனியோ நடந்தால் ஊர்மாற்றம், நாடு மாற்றம், வீடுமாற்றம், தொழில் மாற்றம் போன்ற மாற்றங்கள் உருவாகும். அந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளத்தக்க இனிய மாற்றமாகவே அமையும். 7-ல் உள்ள குரு திருமண யோகத்தை யும் தருவார். சிலருக்கு வேலை, உத்தியோக வகையில் மாறும் யோகமும் அமையும். சிலர் வங்கிக்கடன் பெற்று சொந்தவீடு, வாகனம், மனை வாங்கலாம். எதிர்கால இன்ப வாழ்வுக்கு இக்காலம் அஸ்திவாரம் அமையும். பிள்ளையார் சுழி போடலாம். அதேசமயம் 8-ல் உள்ள சனியோடு கேது- ராகு, செவ்வாய் சம்பந்தமிருப்பதால், உங்கள் வளர்ச்சியும் முன்னேற்றமும் மற்றவர்களின் கண்ணைக் குத்தும். குறிப்பாக, ரத்தபந்தம் சம்பந்தப்பட்ட உறவுமுறைக்காரர்களுக்கு பொறாமையும் திருஷ்டியுமாகப் படும். ஜாதகரீதியாக நல்ல தசாபுக்தி நடந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். எதற்கும் கலங்கவேண்டாம். சனி, ராகு- கேது சம்பந்தப்பட்ட தசாபுக்தி நடந்தால் மட்டும் சந்தையிலே விட்டெறிந்த செருப்பு உங்கள் தலையில் விழுந்தமாதிரி, திருஷ்டிப் பரிகாரமாக எடுத்துக்கொள்ளுங்கள். ராசிக்கு குருபார்வை இருப்பதாலும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெறுவதாலும், மூன்றாவது மாடியில் இருப்பவனை நோக்கி தரையில் நிற்பவன் கல்லை விட்டெறிந்த கதையாகி விடும். மேலே படாது. அப்படிப்பட்ட வர்கள் சூலிலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டிதுர்க்கா ஹோமமும் செய்யலாம். அல்லது சரபேஸ்வரர், பிரத்தியங்கராதேவி, நரசிம்மர் ஆகிய ஏதாவது ஒரு சந்நிதியில் பூஜை செய்யலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சி. அவருடன் 6, 11-க்குடைய செவ்வாயும், ராகுவும் சம்பந்தம். 7-ல் சனி- கேது சம்பந்தம். அத்துடன் ராசிக்கு அந்த இருவரின் பார்வை! அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 6-ல் மறைவு. எந்த ஒரு ஜாதகத்திலும் குரு மறைவாக இருந்தாலும் அல்லது பலவீனமாக இருந்தாலும், அந்த ஜாதகர் சிறுதுரும்பை அசைக்கக்கூட போராட வேண்டும். எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போடவேண்டும். அதாவது கொடுமை கொடுமை என்று கோவிலுக் குப்போனால், அங்கே ரெண்டு கொடுமை ஜிங்குசக்கா என்று ஆடிக்கொண்டிருக்கும் நிலைதான்! சிரமங்களைக் குறைக்கப் பரிகாரம் செய்யக் கோவிலுக்குப் போனாலும், கோவில் பூட்டியிருக்கும்! கர்மம் தொலைய காசிக்குப் போனாலும், சொறிப்பார்ப்பான் காலிலில் விழுந்த கதைதான்! ஆனால் ராசிநாதன் புதன் ஆட்சி பெறுவதால், எதையும் தாங்கும் இதயத்தோடு, சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்குமளவு மனவுறுதி பெறலாம். மலையே விழுந்தாலும் நிலை குலையாமல் எதிர்நீச்சல் போடலாம். விக்ரமாதித்தனை வென்ற போஜ மகாராஜன், அஷ்டலட்சுமி பூஜைசெய்து வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தான். ஒருகாலகட்டத்தில் அவனுக்கு ஜாதகரீதியாக ஏழரைச்சனி வந்தது. அப்போது ஆதிலட்சுமி, ""உனக்கு நேரம் காலம் சரியில்லை. அதனால் உன்னைவிட்டு கொஞ்சகாலம் நாங்கள் ஒதுங்கிநிற்கும் அவசியம் ஏற்படுகிறது. ஆனாலும் உன் பக்திச் சிரத்தையால், எங்கள் எட்டுப்பேரில் யாராவது ஒருவரை உனக்குத் துணையாக விட்டுச்செல்ல முடிவெடுத்துள்ளோம். யார் வேண்டும் என்பதை நீயே முடிவுசெய்து கூறு'' என்றாள். அதற்கு போஜன், ""எந்த லட்சுமி போனாலும் எனக்குக் கவலையில்லை. தைரியலட்சுமி மட்டும் இருந்தால் போதும்'' என்று பதில் கூறினான். மறுநாள் பூஜைசெய்யப் போகும்போது எட்டுலட்சுமிகளும் (அஷ்டலட்சுமிகளும்) அங்கே இருந்தனர். அப்போது, ""எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. தைரியலட்சுமி எங்கே இருக் கிறாளோ, அவளுடன் மற்ற ஏழு லட்சுமியும் இருப்போம்'' என்று பதில் கிடைத்தது. ஆகவே, தைரியம் புருஷலட்சணம் என்பது மட்டுமல்ல; வெற்றிக்கான அஸ்திவாரமுமாகும்! நம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இந்த மூன்றும் இருந்தால், சோதனை களையும் வேதனைகளையும் விரட்டியடித்து, சாதனை படைக்க லாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் செவ்வாய், புதன், ராகு மறைவு! 6-ல் சனி, கேது. மறைவு! இதனால் உங்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் உறுத்தல், வருத்தம் ஏற்படத்தான் செய்யும். அதேசமயம், குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியையும் பார்க்கிறார். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க் கிறார். கேந்திரம் (4, 7, 10) விஷ்ணுஸ்தானம். முயற்சிகளினால் அடையும் வெற்றி- நன்மை! திரிகோணம் (5, 9) லட்சுமிஸ்தானம். தெய்வாதீனமாக- அதிர்ஷ்டவசமாக அமையும் அனுகூலம்- நன்மை! உங்களுக்கு திரிகோணம் வலுவாக இருப்பதால், அதிர்ஷ்டவசமாக எல்லாக்காரியங்களும் கைகூடும். அதாவது மலைபோல வரும் துன்ப மெல்லாம், குருவருளாலும் திருவரு ளாலும் பனிபோல விலகிவிடும். 63 நாயன்மாரில் சாக்கிய நாயனார் என்றொருவர் இருந்தார். ஆரம் பத்தில் அவர் சமண மதத்தில் இருந் தார். பிற்காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டார். சமண மதத்திலிருந்த போது, சிவலிலிங்கத் திருமேனியில் கல்லை விட்டெறியும்படி வழிநடத்தப்பட்டார். அவர் கல்லை எறியும்போது, ""இதை மலராக ஏற்றுக்கொண்டு, என் பிழையை மன்னித் தருளும்'' என்று சிவனிடம் வேண்டிக்கொள் வாராம். அவர் எறியும் கல், மலராக சிவலிலிங்க திருமேனியில் மாறிவிடுமாம். கண்ணப்ப நாயனார் சிவலிலிங்கத்தைக் காலால் மிதித்தார். (அடையாளத்துக்காக.) அர்ஜுனன் வில்லால் அடித்தார். பக்தி நெறியோடு செய்யும் இந்தச் செயல்கள் பாவமில்லாமல் புண்ணியம் சேர்க்கும். ஆக, மற்ற கிரகங்களெல்லாம் மறைந் தாலும், குரு ராசியைப் பார்க்கும் காரணத்தால், உங்கள் கோபதாபமும் குணமாக ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது ஆளை வெட்டு வதற்கும் குத்துவதற்கும் பயன்படும் கத்தி நோயாளியின் ஆபரேஷனுக்கும் பயன்படு வதில்லையா? இரண்டும் வெவ்வேறு கொள்கை, கோட்பாடுதானே!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் திக்பலம். அவருடன் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சி! ஆகவே, எடுத்த காரியங்கள் யாவும் இனிதே ஈடேறும். தொடுத்த செயல்கள் யாவும் அடுத்தடுத்து வெற்றியாகும். அதாவது தொட்டது துலங்கும். 11-ல் உள்ள செவ்வாய், புதன், ராகுவாலும், அவர்களைப் பார்க்கும் சனி, கேதுவாலும், வெற்றிமேல் வெற்றிவந்து உங்களைச்சுற்றி வலம்வரும். அதேசமயம் 5-ல் உள்ள சனியும் கேதுவும் உங்களையறியாமல் உங்களுக்கு ஒரு சந்தேக உணர்வையும் எழுப்பும். அதாவது பூட்டிய வீட்டை நன்றாகப் பூட்டினோமா என்று சிறிதுதூரம் போனபிறகு சந்தேகம் வந்து, திரும்ப வந்து இழுத்துப் பார்ப்பதைப்போல! வெற்றிபெறும்போது எந்த விகல்பமும் ஏற்படாது. தோல்வி அடையும் போது "ஏன் இப்படி நடக்கிறது? நம்மைச் சுற்றியிருப்போரே ஐந்தாம்படையாக சதி செய்கிறார்களோ? அல்லது கருப்பு ஆடாக (பிளாக் ஷிப்) மாறி வெறுப்பேற்றுகிறார்களோ' என்றெல்லாம் சந்தேகம் ஏற்படலாம். உண்மையில் உங்களுடைய வெற்றிக்கும் தோல் விக்கும் நீங்கள்தான் காரணமே தவிர, உங்களைச் சுற்றியுள்ளவர்களோ, சுற்றுச்சூழலோ காரணமல்ல! இதை போகப்போகத்தான் உணரமுடியும். உங்களை அந்த அளவுக்கு ரிமோட் கன்ட்ரோல்மாதிரி இயக்கியது நவகிரகங்களும், தசாபுக்திகளும்தான்! ஆற்றுநீர் ஓடுகிற பாதையிலேயே நீங்களும் நீச்சலடித்தால் எளிதாக நீந்தலாம். எதிர்நீச்சல் போட்டால் கஷ்டம்தான்!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 3, 8-க்குடைய செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருக்க, சனியும் கேதுவும் பார்க்கிறார்கள். இவையெல்லாமே உங்களுக்கு மைனஸ் பாயின்டுதான். அத்துடன் குரு 3-ல் மறைவதும் மைனஸ்தான்! மேலும், 6-க்குடைய சனி ராசியையும் பார்ப்பதோடு, ராசிநாதனையும் பார்க்கிறார். இது குதிரை கீழே தள்ளியதுமட்டுமல்ல; குழியையும் பறித்த மாதிரிதான்! பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள். கிணறுவெட்ட பூதம் புறப் பட்டமாதிரி, வேலிலியோரம் போன ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு, "குத்துதே குடையுதே' என்று புலம்பிய கதைதான். ஆக, உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்த பல காரியங்கள், உங்களுக்கே எதிர்மறைப் பலனாக வும், பிரச்சினைகளாகவும் மாறி தொல்லை ஏற்படுத்தும். அதாவது தொல்லைகளில் இரண்டுவிதமான தொல்லைகள் உண்டு. ஒன்று அன்புத்தொல்லை; இன்னொன்று வம்புத்தொல்லை. நம்மீது அன்பும் அக்கறையும் இருப்பதாக எண்ணிக்கொண்டு ரம்பம்மாதிரி அறுப்பது அன்புத்தொல்லை. ஒரு கோவிலிலில் ஒரு அர்ச்சகர் இருக்கிறார். வரும் பக்தர்கள் தரிசனம் முடித்து சீக்கிரம் போகவேண்டுமென்று வருவார்கள். அந்த அவசரத்தையும் அவசியத்தை யும் உணராமல், அவர் புராண இதிகாசங் களையும் உதாரணங்களையும் சொல்லிலிச் சொல்லிலி, தீபாராதனை காட்டாமல் பேசிப்பேசியே நோகடித்துவிடுவார். வயிறு ஜீரணிக்காமல் அவஸ்தைப்படும் ஒருவரை மேலும்மேலும் "அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடு' என்று உபசரிப்பதுண்டு. ஒருவர் விருந்துக்குப்போன இடத்தில், அவருக்குப் பிடித்த காயோடு, பிடிக்காத காயையும் பரிமாறிவிட்டார்கள். அவர் பிடித்ததை வாய் ருசியாக கடைசியாகச் சாப்பிடலாம் என்று பிடிக்காததை முதலிலில் சாப்பிட்டு காலிலியாக்கினார். விருந்து படைத்தவர்களோ அவர் பிரியமாகச் சாப்பிடுகிறார் என்று மேலும்மேலும் அள்ளியள்ளி வைத்துவிட்டார்கள். இவை யெல்லாம் அன்புத்தொல்லைக்கு உதாரணம். இப்படி சில தர்மசங்கடங் களை சந்திக்கநேரும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும், சொந்த வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் லாபாதிபதியான சூரியன் சம்பந்தப்பட, 3, 6-க்குடைய குரு பார்க் கிறார். இது, கடன்காரருக்கு பயந்து வீட்டில் ஒளிந்திருக்கும் அப்பா, பிள்ளையிடம் "இல்லை' என்று சொல்லும்படி கூற, பிள்ளை, வந்தவரிடம் "எங்கப்பா வீட்டில் இல்லையென்று சொல்லச் சொன்னார்' என்று கூறுவதுபோல! சிலர் எதை மறைக்க வேண்டுமென்று கருதுகிறார்களோ' அதை வேறுசிலர் பப்ளிக்காக போட்டு உடைத்து விடுவார்கள். "எங்கப்பா குதிருக்குள் இல்லை' என்று சொன்ன கதைதான். இரண்டு தரகர்கள் (புரோக்கர்கள்) ஒரு வீட்டை முடித்துக் கொடுத்தார்கள். ஒருவர்தான் முழுமுயற்சி யாக செயல்பட்டவர். இன்னொருவர் ஒப்புக்குத் துணைபோனவர். முன்னவர், துணைக்கு வந்தவருக்கு பேருக்கு ஏதாவது கொடுத்தால் போதும் என்று நினைத்து, கமிஷன் வாங்க- கமிஷன் கொடுத்தவர் ஒரு தொகையைக் கொடுத்து, "இருவரும் சமமாகப் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். மற்றவர் குறைத்து கொடுத்தால் வாங்குவாரா? இப்படி பல தர்மசங்கடமான நிகழ்ச்சிகளால், நீங்கள் தவிக்க நேர்ந்துவிடும். இதுதான் சுக்கிரனும் சூரியனும் மறைந்த பலன். அதாவது லாபத்தில் நஷ்டம். 7-க்குடைய செவ்வாய் ராகுவோடு சேர்ந்து சனி- கேதுவைப் பார்ப்பதால், சில ஆணோ பெண்ணோ காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமண முயற்சிகளில் தீவிரமாக இருப்பார்கள். அதனால் வில்லங்கம், விவகாரங்களைச் சந்திக்க நேரலாம். அப்படிப்பட்டவர்கள் பெண்களானால் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும், ஆண்களானால் கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்தால், இந்த சிக்கலிலிருந்து விடுபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. இதில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் போன்றவற்றைச் சந்திக் கக்கூடும். சுய ஜாதகத்தில் அப்படியிருந் தால், சனிப்பிரீதிக்கும், சந்திரப் பிரீதிக்கும் உண்டான பரிகாரங்களைச் செய்துகொள்ள வேண்டும். சனிப்பிரீதிக்கு, சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு மிளகு தீபம் (நெய்யில்) ஏற்றலாம். நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் செய்யலாம். சந்திரப் பிரீதியாக திங்கட்கிழமைதோறும் சிவலிங் கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யலாம். ஒரு திங்கட்கிழமை சிவனுக்கு ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேகம் செய்யலாம். மற்றவர்கள் சனிக்காக பயப்படத் தேவை இல்லை. ஜென்ம குரு 5, 7, 9-ஆம் இடங் களைப் பார்ப்பதால், மக்கள்- மனைவி பாக்கிய சுகங்களை அடையலாம். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகமும், திருமண மாகாதவர்களுக்கு திருமண யோகமும் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய், புதன், ராகு- கேது சம்பந்தம் பெறுவதால், சிலர் ஜோதிடம், மாந்திரீகம், கோவில் பூஜை என்றும், வைத்தியத் துறையிலும், அருள்வாக்கு கூறுவதிலும் நாட்டம் கொண்டு, பயிற்சி பெறலாம். அதில் தேர்ச்சிய டையலாம். தெளிவு உண்டாகும். ஏழரைச்சனி இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு, பொங்குசனியாகப் பொலிவை ஏற்படுத்தும். முதல் சுற்று- இடப்பெயர்ச்சி, தவிர்க்க முடியாத விரயச்செலவுகள், உறவினர்கள் வகையில் மனவருத்தங்களை ஏற்படுத்தும். அல்லது வைத்தியச்செலவுகளை சந்திக்க நேரலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அவருக்கு வீடுகொடுத்த குரு அதற்கு 12-ல் மறைய- சனி, கேதுவோடு சம்பந்தப்பட்டு, செவ்வாய், ராகு, புதன் பார்வையைப் பெறுகிறார். பணிபுரிகிறவர்களுக்கு ஓய்வுஒழிச்சலற்ற வேலைப்பளுவும் சுமையும் இருக்கும். சாப்பிடக்கூட நேரமில்லாமல் பாடுபட வேண்டும். புதன் 10-க்குடையவர் ஆட்சி என்பதால், உங்களுடைய உண்மை விசுவாசத்துக்குப் பலனாக அலுவலகத்தில் பாராட்டும், பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு, குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தள்ளிப்போவதால், கவலையும் கலக்கமும் ஏற்படலாம். திருமணம், வாரிசு, படிப்பு, உத்தியோகம் பற்றி சிந்தனைகள் ஏற்படலாம். குடும்பப் பெண்களுக்கு, அனைவரும் ஒற்றுமையாகவும், ஆனந்தமாகவும் இணைந்துவாழவேண்டுமென்ற ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். பெற்ற பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கிழக்கும் மேற்குமாக செயல்படுகிறார்களே என்று ஆதங்கம் எற்படலாம். உங்களுடைய அன்பும் ஆசியும் எல்லாரையும் நல்லபடியாக வாழவைக்கும். முன்னேறச்செய்யும். கவலை வேண்டாம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்- நல்ல வர்கள் விரும்புவது நல்லதாகவே நடக்கும். மீன், நீரில் முட்டையிட்டுவிட்டு திரும்பிப் பார்க்குமாம். அதன் பார்வை பட்டவை குஞ்சாகப் பொரியும். கோழி முட்டை யிட்டு, அதை அடைகாத்துப் பொரிக்கும். ஆமை எங்கேயோ முட்டையிட்டுப் விட்டு போய்விடும். வெளியிலிருந்து அதை நினைத்த வுடன், அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்துவிடும். கோழி, மீன், ஆமைபோல உங்கள் நிலை.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. கேது- ராகு, செவ்வாய் சம்பந்தம். சனிக்கு வீடுகொடுத்த குரு, அவருக்கு 12-ல் மறைவு. எனவே செலவுகள் தவிர்க்க முடியா தவை! யோகமான தசாபுக்திகள் நடந்தால் சுபச்செலவுகளும், மோசமான தசாபுக்திகள் நடந்தால் தேவையில்லாத விரயச்செலவுகளும் உண்டாகும். குடும் பத்தில் சுபமங்கள விசேஷங்களுக்கு (காதணி, ருது மங்களம், பிரசவம், திருமணம், படிப்பு யோகம், வேலைவாய்ப்புக்கான பயணம் போன்றவை) ஏற்படும் செலவு சுபவிரயம். கோர்ட் வழக்கு, விவகாரம், பஞ்சாயத்து, விபத்து, வைத்தியச்செலவு, கடன் வட்டி- தண்டத் தீர்வை போன்ற செலவுகள் வீண்விரயம்! ஆளுங்கட்சி அரசியல்வாதி ஒரு விழா நடத்தினார். அதற்கு எல்லாரிடமும் நிதி வசூல்செய்தார். அந்தக் கட்சிக்குப் பிடிக்காத, எதிர்க்கட்சிக் கடைக்காரரிடமும் பணம் கேட்டார். அவர் தரமறுக்கவே, அவர் கழுத்தில் அணிந் திருந்த தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு போய்விட்டார். போலீசுக்குப் போகமுடியாது. கெட்ட கனவு கண்டதாகக் கருதி மௌனமாக இருந்துவிட்டார். இதுதான் தண்டம், தீர்வை. சிலர் வெளிநாட்டு மோகத்தால் வேலைக்குப் பணம் கொடுப்பார்கள். அது மோசடிப் பேர்வழியாக இருக்கும். கொடுத்த பணம் ஏமாற்றமாகலாம். நஷ்டமாகலாம். இதுதான் விரயச்சனியின் வேலை.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம். அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் கேந்திரம். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 5-ல் திரிகோணம். எனவே கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், எல்லாம் உங்களுக்கு நல்ல தாகவே அமையும். தொட்டது துலங்கும். கெட்டது விலகும். பட்டது துளிர்க்கும். தொலைந்த பொருட்களும் அல்லது காணாமல் போனவர்களும் மீண்டும் காணக் கிடைக்கும். கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும், கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் பூஜைசெய்தால், காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்கள். தொலைந்த பொருட்களும் திரும்பக் கிடைக்கும். வாராக்கடன்களும் வசூலாகும். தொழிலதிபர்களுக்கு விசுவாசமான, உண்மையான வேலையாட்கள் அமைவார்கள். குடும்பத்தில் அன்யோன்யமும், நல்லுறவும் மலரும். முயற்சிகள் வெற்றியடையும். தளர்ச்சியில்லாத ஆரோக்கியமும் தைரியமும் உண்டாகும். செய்யும் தொழில் சீரும் சிறப்பும் அடையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய அவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதேபோல 9-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம். 12 ராசிக்காரர்களில், தற்போதைய கோட்சார கிரக அமைப்பு மீன ராசிக்கு மட்டுமே அதிர்ஷ்டமும் யோகமும் உடையதாக அமைகிறது. எனவே, கலையாத கல்வியும் தொலையாத நிதியும் என்று அபிராமிபட்டர் பாடியமாதிரி, 16 பாக்கியமும் உங்களுக்கு உண்டாகும். மனிதர்களில் இருவகை- எந்தக் குறையும் இல்லையென்று, எல்லாம் உள்ளதென்று திருப்திப்படுகிறவர்கள் ஒருவகை! "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று நிறைவுபெறலாம். இன்னொருவகை- எல்லாம் இருந்தும், எதுவும் இல்லையென்றும், இன்னும் தேவையென்றும் பஞ்சப்பாட்டு பாடி, பற்றாக்குறையாக உள்ளது என்பார்கள். தெளிவில்லாதவர்கள்- மனநிறைவில்லாதவர்கள்! இதனால்தான் பெரியோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்றார்கள். தீக்குச்சி தீபமேற்றவும் பயன்படும்- குடிசை தீப்பற்றி எரியவும் பயன்படும். கத்தி காய்கறி நறுக்கவும் பயன்படும். ஆளைக் குத்திக் கொலை செய்யவும் பயன்படும். அதேபோல, மீன ராசியில் நல்லவர்களும் வல்லவர்களும் உண்டு. பொல்லாதவர்களும் உண்டு. நீங்கள் எந்த வகை, எந்த ரகம் என்பதை உங்கள் மனம்- செயல்- நடவடிக்கைகள் தீர்மானிக்கும்.